இந்தியாவில் குடும்பக்கட்டுப்பாடு செய்வதில் இருக்கும் 8 மாபெரும் சவால்கள்!

இந்தியா மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நமது குடும்பத்திலேயே கூட சிலருக்கு பத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் கூட இருக்கும். நமது முன்னோர்கள் குடும்பக்கட்டுப்பாடு பற்றி அறிந்திருக்கவில்லை அதனால் இவ்வாறு நிகழ்ந்ததது என கருதினாலும், இன்றும் கூட குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள பல சவால்கள் இருக்க தான் செய்கிறது அவற்றை பற்றி இந்த பகுதியில் காணலாம்.
ஆண்கள் இதை செய்யமாட்டார்கள்

ஆண்கள் இதை செய்யமாட்டார்கள்

இந்தியாவில் காலமாக பெரும்பாலும் ஆண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ள முன்வருவதில்லை. பெண்கள் தான் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்ற கையோடு குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள்.

பொதுவாகவே பெண்களுக்கு பலவிதமான வலிகள் இயற்கையாவே இருக்கின்றன. அதனுடன் சேர்த்து குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையின் வலியையும் அனுபவிக்கின்றனர்.

விழிப்புணர்வு இல்லை

குடும்பக்கட்டுப்பாடு என்று வரும் போது ஆண்கள், பெண்களை கைகாட்டிவிடுகின்றனர். பெரும்பான்மையான ஆண்களுக்கு இதில் விழிப்புணர்வு இல்லை. தனது ஆண்மை பறிபோய்விடும் என்ற தவறான கருத்தை கொண்டுள்ளனர்.

1% ஆண்கள் மட்டும் தான்

ஆண்களில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முன்வருகின்றனர்.

உடலுறவு பிரச்சனை வருமா?

நாட்டின் சில பகுதிகளில் உள்ள குடும்பங்கள் தங்களது குடும்பத்தில் உள்ள பெண்களை குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ள அனுமதிப்பதில்லை. இதனால் உடலுறவில் சரியான ஈடுபாடு இருக்காது என்ற தவறான கருத்து இன்னும் சில பகுதி மக்களிடையே நிலவி வருகிறது.

ஆண் குழந்தை வேண்டும்!

பெரும்பான்மையானோர் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காகவே மூன்று அல்லது நான்கு குழந்தைகளுக்கு பிறகும் கூட குடும்பக்கட்டுப்பாடு செய்யாமல் இருக்கிறார்கள். பெண்களிடம் பெரும்பாலான குடும்பங்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண் குழந்தைகள் வேண்டும் என்ற ஒரு சுமையை வைத்துவிடுகின்றன.

உடனடியாக குழந்தை வேண்டும்

திருமணமான ஒரு பெண் உடனடியாக தனக்கு மலட்டுத்தன்மை இல்லை என்பதை தனது கணவனின் வீட்டிற்கு நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் இன்று வரையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

தேவையற்ற கர்ப்பம்

குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ளாமல் இருப்பது, தேவையற்ற கர்ப்பத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் பெரும்பான்மையானோர் தரமற்ற, பதிவு செய்யப்படாத இடங்களுக்கு சென்று தனது கருவை கலைத்துக்கொள்கின்றனர். இதனால் பெண்களின் உடல்நிலை பெருமளவில் பாதிக்கப்படுகிறது.கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகள்

கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகள்

இந்தியாவில் உள்ள சில கலாச்சாரங்கள் மற்றும் மதங்களில் கருவை கலைப்பது மற்றும் குடும்பக்கட்டுப்பாடு செய்வது ஆகியவை கலாச்சார கோட்பாடுகளுக்கு எதிரானதாக இருக்கிறது. எனவே அவர்களது குடும்ப பெண்களை குடும்பக்கட்டுப்பாட்டிற்கு அனுமதிப்பதில்லை.